தடுப்பூசிகளை செலுத்துவதே, கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஒரே தீர்வாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான உரிய திட்டம், அரசாங்கம் வசம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கைக்கு முதல் தடவையாக கொண்டு வரப்பட்ட எஸ்ட்ராசேனாகா தடுப்பூசி, 925,242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை மே மாத ஆரம்ப வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி 200,000தை ஏப்ரல் மாத இறுதியிலும், 400,000 தடுப்பூசிகளை மே மாதத்திலும், 800,000 தடுப்பூசிகளை ஜுன் மாதத்திலும், 1,200,000 தடுப்பூசிகளை ஜுலை மாதத்திலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய வகையில் முகக் கவசத்தை அணிதல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுத்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ளுதல், நிகழ்வுகள் போன்ற மக்கள் ஒன்று கூடும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டை முடக்குவதே, கொவி;ட் தொற்றுக்கான தீர்வு என சில தரப்பினர் நினைத்துக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஆரம்ப காலக் கட்டத்தில் அவ்வாறான நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கும் பெறுபேறுகளை வழங்கியிருந்தாலும், நீண்ட காலத்திற்கு அது பொருத்தமற்றது என அவர் கூறுகின்றார்.
மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு அது, எதிரான தாக்கத்தையே செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டை, முழுமையாக முடக்க முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில், தாம் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, மக்கள் என்ற வகையில், தமது பொறுப்பு மற்றும் கடமைகளை சுயமாக நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post