பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பில் கோரப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீளவலியுறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பைa வரவேற்பதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சாமர சம்பத் எதிர் இலங்கை பாராளுமன்றம் தொடர்பில் விவகாரத்தில், 2010 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை உடனடியாக வெளியிடவேண்டுமென கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு உத்தரவிட்டது. இருப்பினும் ஆணைக்குழுவின் இத்தீர்ப்பை எதிர்த்து பாராளுமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. அம்மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பை மீளுறுதிப்படுத்தி கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு, ‘இத்தீர்ப்பானது ஊழலுக்கு எதிராகப் போராடும் நோக்கிலேயே இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்புக்களைப் பிரகடனப்படுத்தல் தொடர்பான சட்டமும், தகவல் அறியும் உரிமைச்சட்டமும் இயற்றப்பட்டுள்ளன என்பதைக் காண்பிக்கின்றது’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் ‘அதிகாரக்கட்டமைப்புக்கள் சட்டத்தின் பிரகாரம் உரியவாறு செயற்படுகின்றவா என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்வது அவசியமாகும். எனவே தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதே அதற்கான ஒரே வழியாகும்’ என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.(TrueCeylon)