பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி, மக்களின் உயிர்களை காவுக் கொடுக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறித்து இன்று (23) காணொளியொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் கூறியுள்ளார்.
உயிர்களை காவுக் கொடுக்க இதுவொரு பைசர் மலை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை மத்திய வங்கி, புதிதாக பணத்தை அச்சிட்டமையினாலேயே, நாட்டின் பணப் பெறுமதி வீழ்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
கொவிட் தடுப்பூசிக்கான 20 கோடி டொலரை கடந்த நவம்பர் மாதம் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், இன்று இந்த பிரச்சினை நாட்டில் கிடையாது என ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக, இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வந்தமையினாலேயே, நாட்டிற்குள் இந்த வைரஸ் பரவியதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், குழுக்களினால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமையை காண முடிகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதற்கான பொறுப்பை அமைச்சரவை ஏற்று, புதிய திட்டமொன்றை வகுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
இலங்கைக்கு 3 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அவற்றை முழுமையாக இந்த ஆண்டிற்குள் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
அதனால், புதிய திட்டம் தொடர்பில் சிந்தித்து, அந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான தேவை காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
Discussion about this post