இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருகைத் தர தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், அனைத்து விமான நிலையங்களும் நேற்று (31) வரை மூடப்பட்டிருந்தன.
எனினும், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் இன்று (01) முதல் திறக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு வருகைத் தரும் அனைத்து பயணிகளும், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகள், அந்தந்த நாடுகளில் PCR பரிசோதனைகளை நடத்தி, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் மாத்திரமே இலங்கைக்கு வருகைத் தர முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவிக்கின்றார்.
இவ்வாறு இலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள், நாட்டிற்குள் வருகைத் தந்தவுடனேயே, மற்றுமொரு PCR பரிசோதனையை நடத்த வேண்டும் என அவர் கூறுகின்றார்.
அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டிற்கு வருகைத் தந்த 10 முதல் 14 நாட்களுக்குள் மற்றுமொரு PCR பரிசோதனையை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post