இலங்கையில் மின் சக்தியில் இயங்கும் பஸ்களை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட மேல் மாகாணத்தை இலக்காக கொண்டு இந்த திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கு செலவிடப்படும் செலவீனத்தை குறைக்கும் நோக்கிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு, மின் சக்தியில் இயங்கும் பஸ்களை இணைத்துக்கொள்வதற்கும், தனியார் மற்றும் அரச இணைந்த திட்டமாக இதனை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிகாலத்தில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் வகையில் SYSTEM CHANGE செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மின்சக்தியில் இயங்கும் முச்சக்கரவண்டிகள், பஸ்களை போன்று எதிர்காலத்தில் மின் சக்தியில் இயங்கும் ரயில் சேவையை ஆரம்பிக்கவும் திட்டமுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக கொழும்பு – அவிசாவளை ரயில் மார்க்கத்தை மின் சக்தியில் இயங்கும் ரயில் மார்க்கமாக மாற்றும் கனவை நிஜமாக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)