ராகமை – மஹபாகே பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பொருட்களை திருடிய நபரொருவர், தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹபாகே பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நபரொருவர் பொருட்களை கொள்ளையிட்டு செல்வதை அவதானித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர், சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் தன் வசமிருந்த கத்தியால், முச்சக்கரவண்டி சாரதியை குத்தி, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிலர், சந்தேகநபரை பின்தொடர்ந்துள்ளனர்.
இதன்போது, தன்னை யாராவது பிடிக்க முயற்சித்தால், தான் தற்கொலை செய்துக்கொள்வதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தனது கையிலிருந்த கத்தியால், தனது கழுத்தை சந்தேகநபர் வெட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, 1990 அம்பியூலன்ஸ் வண்டியின் உதவியுடன், காயடைந்த சந்தேகநபரை ராகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, ராகமை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ராகமை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)