கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான தான் உண்மையான மனிதர்களை அடையாளம் கண்டுக்கொண்டதாக, இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபரான ஜயந்த ரணசிங்க தெரிவிக்கின்றார்.
பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”முன்னரை போன்று, தற்போது யாரும் எமது வீட்டிற்கு வருவது கிடையாது. உறவினர்கள், நண்பர்கள் தொடர்பில் கடந்த 11 மாதங்களில் நாங்கள் பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டோம். பௌத்த தர்மத்தை பின்பற்றும் நான், அவை அனைத்தையும் அறியாமை என்றே நினைக்கின்றேன்” என அவர் கூறியுள்ளார்.
தான் மற்றும் தனது மனைவி ஆகியோர் எதிர்கொண்ட அனுபவங்களை பிபிசி சிங்கள சேவையுடன் அவர் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
ஜயந்த ரணசிங்கவிற்க 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொழும்பு – ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஜயந்த ரணசிங்க, 2020 மார்ச் 22ம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
தான் வர்த்தக நிலையத்திற்கு சென்றபோது, வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தன்னை கண்டதும், கதவை மூடுமாறு கூறியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
தான் மோட்டார் சைக்கிளில் செல்லும் சந்தர்ப்பத்தில், தனக்கு நன்கறிந்தவர்களை கண்டு, அவர்களுடன் கலந்துரையாட முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில், அவர்கள் தன்னை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றே பேசுவார்கள் எனவும் அவர் கூறுகின்றார்.
தாம் வர்த்தக நிலையத்திற்கு செல்லும் போது, பொது சுகாதார வைத்திய அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு சிலர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தாம் கொவிட் வைரஸை பரப்புவதாக முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தன்னுடன் நெருங்கி பழகியவர்கள், தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை கூட எடுக்கவில்லை என கூறிய அவர், தொலைபேசி ஊடாகவும் கொவிட் பரவும் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் அழைப்பை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடுகின்றார்.
வீட்டிற்கு அருகில் செல்வோர், மூக்கை மூடிக்கொண்டு சென்ற சந்தர்ப்பங்களும் உள்ளது என அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, தனக்கு உதவி புரிந்தவர்களும் சமூகத்தில் இருக்கின்றனர் என ஜயந்த ரணசிங்க கூறியுள்ளார். (BBC Sinhala)
Discussion about this post