இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு தலைவர் ஒருவர் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண கல்வி அமைச்சு இல்லாது போன விடயத்தை தான் கண்டிப்பதாக செந்தில் தொண்டமான், மின்னல் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், செந்தில் தொண்டமான், அரசாங்கத்தில் இருந்தவாறே, அரசாங்கத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்தமையை இட்டு, தான் வரவேற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூறுகின்றார்.
ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை குறித்து, தான் ஆளுநருடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் ஆளுநரின் தலையீடு குறைவாகவே காணப்பட்டுள்ளதாகவும், நிர்வாக கட்டமைப்பை மேற்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் செந்தில் தொண்டமான் கூறுகின்றார்.
எனினும், நிர்வாக கட்டமைப்பு என கூறுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்தவாறு, அரசாங்கத்தின் சார்பாக பேசாது, அரசாங்கத்திற்கு எதிராக செந்தில் தொண்டமான் கருத்து வெளியிடுகின்றமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post