ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகளை அடுத்து, அந்த கட்சி இருவேறு குழுக்களாக பிளவுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில் ஒரு குழுவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவுமாக பிரிந்து, சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம் (10) சந்தித்து சில தீர்மானங்களை எட்டியிருந்தனர்.
அதன் முதற்கட்டமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஸ ஆகியோரை தனித்தனியே சந்தித்து, கட்சியை பாதுகாப்பது குறித்து கலந்துரையாட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர்.
அதேபோன்று, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில், அவரது வீட்டில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.
கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவில் அங்கம் வகிப்பதாக அறிய முடிகின்றது.
கட்சியிலுள்ள பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை தனித்தனியே சந்திக்க விமல் வீரவங்ச தலைமையிலான குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான நிலையில், பிரதான எதிர் கட்சிகள் சில ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து இரகசியமாக கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக அறிய முடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுடன், எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடிய போது, தாம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்காகவே செயற்பட்டு வருவதாக கூறியுள்ளனர் என நம்பகரமான தகவல்கள் குறிப்பிடுகின்றன. (TrueCeylon)
Discussion about this post