வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தரும் போது, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் கால எல்லை 7 நாட்கள் வரை குறைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளைய தினம் (15) எட்டப்படும் என கூறப்படுகின்றது.
நாளைய தினம் நடைபெறவுள்ள கொவிட்-19 தொடர்பிலான தொழில்நுட்ப குழுவின் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சு கூறுகின்றது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கை பிரஜைகளை, ஹோட்டல் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தும் காலம் இதுவரை 14 நாட்களாக காணப்பட்டது.
இதேவேளை, இலங்கையிலிருந்து குறுகிய கால எல்லைக்கு வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பும் இலங்கையர்கள் பின்பற்றும் சுகாதார நடைமுறை அடங்கிய வழிகாட்டி சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கடந்த 10ம் திகதி முதல் அமலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திர சுற்றுப் பயணம், உத்தியோகப்பூர்வ பயணங்கள், வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு குறுகிய கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்படுகின்றது.
இவ்வாறு வெளிநாடு சென்று, மீண்டும் நாடு திரும்பும் குறுகிய கால பயணிகள், நாடு திரும்பியதும் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கு 5 அல்லது 7 நாட்களில் பரிசோதனை நடத்தப்பட்டு, அவருக்கு கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும் கூறப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post