நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர்ந்த வேறு எந்;தவொரு தரப்பினரும் மாகாண எல்லைகளை கடக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மாகாண எல்லைகளை கடக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எனினும், மாகாண எல்லைகளில் பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறுக்கு வீதிகளை பயன்படுத்தி, மாகாண எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு எதிராக குற்றவியல் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றிலுள்ள சரத்துக்களுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க எந்தவித அனுமதிப் பத்திர நடைமுறையும் செயற்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post