இரத்தினபுரி − ஓபநாயக்க பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரை பதவி நீக்குமாறு கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குறித்த தமிழ் பாடசாலையின் அதிபர், பாடசாலை மாணவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாகவும் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 8ம் திகதி ஓபநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதையடுத்து, குறித்த அதிபர் ஓபநாயக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பலாங்கொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, இந்த தமிழ் பாடசாலையின் அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து, மாகாண கல்வி அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ரூபன் பெருமாள், ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகள், குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post