ஓமானில் இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு மற்றும் வவுனியா – பூவரசன்குளம் பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணைகளிலேயே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து, 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்களை ஓமானுக்கு அழைத்து சென்று, அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்ட பெண் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹியத்தக்கண்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், இந்த பெண் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு, தெஹியத்தக்கண்டி நீதவான் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவொன்றை பெற்றுக்கொண்டுள்ளது.
சந்தேகநபரான பெண், மேலும் சில தரப்பினருடன் இணைந்தே இந்த தொழிலை செய்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட பெண்ணை, எதிர்வரும் 18ம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சந்தேகநபரான குறித்த பெண், ஓமானிலிருந்து கடந்த 25ம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறான நிலையில், குறித்த பெண், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வெளியேறும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வவுனியா பதில் நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post