தமிழன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் R.சிவராஜாவை, அடையாளம் தெரியாத இருவர் பின்தொடர்ந்தமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வசந்தம் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய R.சிவராஜா, இன்று (12) அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது, ஊடகவியலாளர் R.சிவராஜா வசிக்கும், தொடர்மாடி குடியிருப்புக்கு, அடையாளம் தெரியாத இருவர் வருகைத் தந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தொடர்மாடி குடியிருப்பு பாதுகாப்பு உத்தியோகத்தரிடம், தன்னை பற்றி விசாரித்த அடையாளம் தெரியாத இருவரும், தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என பலவந்தப்படுத்தியதாக ஊடகவியலாளர் R.சிவராஜா TRUECEYLON.LK இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், பொலிஸாருடன் வருமாறு, தமது குடியிருப்பு பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த இருவருக்கும் கூறிய நிலையில், பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நீண்ட நேர முரண்பாட்டில் இருவரும் ஈடுபட்டு, பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என கூறிக்கொண்டு வந்த தரப்பினர், ஏன் பகலில் வராது, இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு வர வேண்டும் என ஊடகவியலாளர் R.சிவராஜா கேள்வி எழுப்புகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ் மாஅதிபருக்கு முறைபாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post