தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றும் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணைக்குழுவில் புதிய அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை அண்மையில் சமர்ப்பித்திருந்தார்.
ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோருவதற்கு அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்ததுடன் அது தொடர்பான கால அவகாசம் கடந்த மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்ளுராட்சி பிரதேச எல்லை நிர்ணய தேசிய குழுவின் காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்குமாறு பொறுப்பான அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் குழு கோரிக்கை விடுத்துள்ளது.(TrueCeylon)