தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும் என இந்தியா, பிரித்தானியாவிற்கு அறிவித்துள்ளது.
குறித்த அமைப்புக்கு எதிரான தடையை ஏன் நீக்கக்கூடாது என்பது தொடர்பில் இந்தியா, பிரித்தானியாவிற்கு தெளிவூட்டல்களை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து விசாரணை நடத்தும் நீதிமன்றத்தினால் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தியா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆகியோரை விடுதலைப் புலிகள் அமைப்பே படுகொலை செய்ததாகவும் இந்தியா கூறியுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானியாவிடம் கோரியுள்ளது.
இந்த பின்னணியிலேயே இந்தியாவும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத சித்தார்த்தத்துடன் இணைந்த குழுக்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் இன்றும் உள்ளமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு, பிரித்தானியாவிற்கு குறிப்பிட்டுள்ளது.
குறித்த குழுவினர் வன்முறைகளை தூண்டவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி, விடுதலைப் புலிகளின் தடை நீக்கமானது, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும், பிராந்திய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.
உலகில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயார் என அதில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.