இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த 2009ம் ஆண்டு காலப் பகுதிக்கு பின்னரான காலங்களில், நாட்டிற்குள் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களில் அதிகளவிலானவை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக மே மாதம் 18 மற்றும் 19ம் திகதிகளில் வழமையாகவே கடந்த காலங்களில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
அரசாங்கத்திற்கு சொந்தமான இணையத்தளங்கள், ஊடக நிறுவனங்களின் இணையத்தளங்கள் என பல இணையத்தளங்களின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக இணையத்தளமொன்றிற்குள் ஊடுறுவி, அந்த இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக பதிவுகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் இலங்கைக்கு சொந்தமான.LK இணைய முகவரிக்கான பெயர் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
.LK இணைய பெயர்களின் ஐ.பி முகவரியில் மாற்றத்தை ஏற்படுத்தி, வேறு இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் வகையில் சிலரால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்றைய தினம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு காணப்படுகின்றதா என .LK இணையத்தள பதிவு நிறுவனத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் கிஹான் டயஸிடம் வினவினோம்.
மே மாதம் நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கும், இன்றைய தினம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் கூறினார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள், இணையத்தளங்களுக்குள் ஊடுறுவி, விடுதலைப் புலிகளுக்கு சார்பாக தகவல்களை காட்சிப்படுத்திய போதிலும், இன்றைய தினம் அவ்வாறான ஒன்றும் இடம்பெறவில்லை.
இணையத்தள முகவரியை, வேறு இணையத்தளங்களுக்கு செல்லும் வகையிலேயே இன்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவிக்கின்றார்.
அதனால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post