கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக திம்புல-பத்தன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று மோதியுள்ள நிலையிலேயே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி ராஜலிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் திசையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறியொன்று, கொட்டகலை உடன் பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த முதியவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் லொறியை பின்தொடர்ந்துள்ளனர்.
இதன்போது, குறித்த லொறியை பத்தன சந்திப்பில் நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், லொறியின் சாரதி, லொறியை மீண்டும் ஹட்டன் நோக்கி செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், லொறியின் சாரதி, லொறியை கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் விட்டு, விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்து, கொட்டகலை நகரின் வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது,
இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த லொறியை, சில தரப்பினர் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி, திம்புல-பத்தன பொலிஸ் நிலையத்தில் பின்னர் சரணடைந்துள்ளதுடன், அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post