மக்கள் மாத்திரமன்றி, அதிகாரிகளும் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
கடந்த 3 தினங்களாக பொலிஸார் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில், மக்கள் மாத்திரமன்றி, அதிகாரிகளும் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டு வருகின்றமை உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட நுகர்வோர் அதிகளவில் செல்லும் இடங்களில் மக்கள் முகக் கவசனங்களை அணியாது இருக்கின்றமை, சமூக இடைவெளியை பேணாது செயற்படுகின்றமை போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
மேலும், பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகள் மாத்திரமன்றி, அதன் சாரதிகள் மற்றும் நடத்துநர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், விருந்துபசாரங்கள், வைபவங்கள் உள்ளிட்ட வேறு நிகழ்வுகளிலும் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டு வருவதாக அஜித் ரோஹண கூறுகின்றார்.
இதனால், பொலிஸ் தலைமையகத்தினால் விசேட சுற்று நிரூபமொன்று, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சுற்று நிரூபத்தின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் சீருடை மற்றும் சிவில் ஆடைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் சுகாதார நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கின்றார்.
மேலும், சித்திரை புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, சுகாதார பிரிவு மற்றும் பொலிஸ் நிலையங்களில் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.
அத்துடன், பொது போக்குவரத்துக்களில் ஈடுபடும் பயணிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் நுகர்வோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post