அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் ‘International Women of Courage‘ விருதுக்கு, இலங்கை சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகில் தைரியமிக்க பெண்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுக்கே சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவாகியுள்ளார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி காணொளி தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து தனது கருத்துக்களை இங்கு பகிரவுள்ளார்.
ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
தனிப்பட்ட முறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.
உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக International Women of Courage விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post