கொவிட் வைரஸ் வேகமாக பரவிவரும் நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வர வேண்டாம் என சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு, கையேந்தியவாறு அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
கடந்த 14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள், நேற்றைய தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பல நாடுகளில் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவி வருகின்றமையினால், அவ்வாறான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வர வேண்டாம் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அமலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்தும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, கருத்து வெளியிட்டார்.
நாட்டில் தற்போது பதிவாகின்ற கொவிட் தொற்றாளர்கள் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, நாட்டை படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
கொவிட் தொற்றாளர்கள் குறைவாக பதிவாகும் பகுதிகளை முதலில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அதையடுத்து, தரவுகளை அடிப்படையாக வைத்து, ஏனைய பகுதிகளை திறப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
மேலும், நாடு திறக்கப்படுவதற்கு முன்னர், கொவிட் தொடர்பான பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.
தரவுகளை அடிப்படையாக வைத்து, விஞ்ஞான ரீதியில் தீர்மானத்தை எட்ட வேண்டும் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, கொவிட் பரவல் அதிகரித்துள்ள நாடுகள் தொடர்பிலான பட்டியல்களை ஏனைய நாடுகள் பயன்படுத்தி வருவதாகவும், அதே பட்டியலை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.
இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தடுப்பூசி பெரும்பாலும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நாடுகளிலிருந்து மாத்திரம் சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதைத் தவிர வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வர வேண்டாம் என தான் கையேந்தி கோருவதாக பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவிக்கின்றார். (ADA DERANA)
Discussion about this post