கொவிட் – 19 வைரஸ் தடுப்பிற்கான ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசேனேகா தடுப்பூசிக்காக அரசாங்கத்தினால் இதுவரை 50 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
நாட்டிற்கு 12 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள், இலவசமாகவும், பணத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவற்றில் 5 லட்சம் வரையான தடுப்பூசிகளை அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஒரு தடுப்பூசியின் விலை 5.20 அமெரிக்க டொலர் என்பதுடன், இலங்கை 5 லட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, குறித்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக 5000 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசி மருந்துகளை களஞ்சியப்படுத்துவதற்காக குளிரூட்டல் கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, சிலின்ஜர் கொள்வனவு, மனித வள பயன்பாடு உள்ளிட்ட செலவீனங்களுக்காக வேறாக பணம் செலவிடப்பட்டுள்ளதென அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு இதுவரை கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளில் 5 லட்சம் தடுப்பூசிகள் இலவசமாகவும், 5 லட்சம் தடுப்பூசிகள் பணத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எஞ்சிய 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள், கொவேக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிடுகின்றார்.
கடந்த 14ம் திகதி வரையான காலம் வரை 7 லட்சத்து 73 ஆயிரத்து 11 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post