இலங்கையின் கொவிட் தடுப்பூசியை தயாரிப்பது குறித்து காணப்படும் சட்ட நிலைமை குறித்து, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஓளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் தரநிர்ணய இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஷன்ன ஜயசுமன உள்ளிட்ட தரப்பினருடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் நடைபெற்றதாக அமைச்சு கூறுகின்றது.
கொவிட் தடுப்பூசிக்கு சர்வதேச ரீதியில் பாரிய கேள்வி காணப்படுகின்ற பின்னணியில், தடுப்பூசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், உள்நாட்டிலேயே இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வதன் ஊடாக, பாரிய நிதியை சேமிக்க முடியும் என இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் ஊடாக, ஆகஸ்ட் மாதம் அளவில் 6 மில்லியன் தடுப்பூசிகளையும், செப்டம்பர் மாதம் அளவில் 7 மில்லியன் தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளதாக நீதி அமைச்சு தெரிவிக்கின்றது.
அதன்படி, கொவிட் தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இந்த விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் சட்ட மூல திணைக்களம் ஆகியன அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post