மொரகஹஹேன-மில்லவ-தம்மாநந்த ப்ளேஸில் வர்த்தக நிலையமொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹொரணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், சந்தேக நபர் வந்த சிறிய லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆசிரியை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியில் வந்த சந்தேகநபர், ஆசிரியையின் பாதையை குறுக்கிட்டு அவரை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அப்பெண் மிகுந்த முயற்சிக்கு பின் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் அவரை பின்தொடர்ந்து வந்து அந்த வீட்டாரிடம் விசாரித்த போது, பின்னால் இருந்த கதவு ஊடாக அவர் தப்பி ஓடிவிட்டதாக வீட்டு உரிமையாளர் சந்தேக நபரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த ஆசிரியை 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மொரகஹஹேன பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.(TrueCeylon)