கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தலை துண்டிக்கப்பட்ட யுவதியின் தலையை தேடி தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள், தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காணொளிகளின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக டாம் வீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று, குறித்த யுவதியின் தலையை தேடும் பணிகள் படல்கும்புற பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக படல்கும்புற பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
களனி ஆற்றின் முகத்துவாரம் முதல் ஹங்வெல்ல வரையான பகுதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகரின் படல்கும்புற பகுதியிலுள்ள வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தேடுதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு நடத்தப்பட்ட தேடுதல்களின் ஊடாக சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் அணிந்திருந்த ஆடை மற்றும் அவர் கொண்டு சென்ற பையொன்றும் தீக்கிரையான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த யுவதியின் தலையை மாத்திரம் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர், உயிரிழந்த யுவதியின் இறுதிக் கிரியைகள் கடந்த 10ம் திகதி நடத்தப்பட்டதுடன், கொலையாளி என சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியைகள் கடந்த 7ம் திகதி நடத்தப்பட்டன.
குருவிட்ட – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான யுவதியொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பயணப் பையிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட உடல் கடந்த முதலாம் திகதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post