கொழும்பு – டாம் வீதி பகுதியில் கடந்த முதலாம் திகதி பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.
குருவிட்ட – தேத்பனாவ பகுதியிலுள்ள மயானத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.
கொழும்பு – டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து, யுவதியொருவரின் சடலம் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த முதலாம் திகதி கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதான யுவதியொருவரே உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் ஊடாக, புத்தள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த யுவதியை கொலை செய்தமை கண்டறியப்பட்டது.
குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த பின்னணியில், சந்தேகநபரின் உடல் படல்கும்புற பகுதியிலுள்ள அவரது வீட்டு காணியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், குறித்த யுவதியின் தலை பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதியின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, உயிரிழந்த பெண்ணின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.
Discussion about this post