கொவிட் தொற்று பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்கள் தொடர்பில் சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புக்களை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயத்தில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்காக, நாட்டில் பசுமை விவசாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி, விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)