பிரபல அழகு கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்துக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் மேலும் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட மேலும் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட 15 பேருடன், மொத்தமாக 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த 30ம் திகதி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பிறந்த நாள் நிகழ்வுகளை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பிறந்தநாள் நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வுகள் இடம்பெற்ற நட்சத்திர ஹோட்டலின் சமையல் நிபுணருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post