8ஆம் இணைப்பு
மஹர சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
7ஆம் இணைப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.
ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த நிலையிலேயே குறித்த 6 பேரின் சடலங்களும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவத்தில் மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பரவிய தீ, இன்று அதிகாலை வரை தொடர்ந்தும் பரவியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறாவது இணைப்பு
மஹர சிறைச்சாலைக்குள் தொடர்ந்தும் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் தீ பரவியுள்ள நிலையிலேயே, துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தொடர்ந்தும் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்தாவது இணைப்பு
மஹர சிறைச்சாலையிலிருந்து தமது வைத்தியசாலைக்கு 4 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளரை மேற்கோள்காட்டி அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
24 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நான்காவது இணைப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் தீ பரவியுள்ளது.
சிறைச்சாலையில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Fire reported within the Mahara Prison complex. Smoke and flame seen from the vicinity. #MaharaPrison #SriLanka #lka pic.twitter.com/HcW5grKejv
— Infocept.News (@InfoceptNews) November 29, 2020
மூன்றாவது இணைப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையினால் ஒருவர் உயிரிழந்து, மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 5 கைதிகளும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
இரண்டாவது இணைப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால், கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அமைதியின்மை காரணமாக மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட பின்னணியில், மேலும் சில கைதிகள் சிறைச்சாலையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலாவது இணைப்பு
மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடி படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.