இலங்கை : கொவிட் – 19 தொற்றினால் உயிரிழக்கும் அனைவரது சடலங்களும் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்படும் விதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தகனம் மாத்திரமே செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை புதைக்காது, தொடர்ந்தும் அவை தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி உறுதிப்பட கூறியுள்ளார்.
மதம், அரசியல் அல்லது வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சரிடம், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.
வைரஸ் தொடர்பிலான விசேட நிபுணர்கள் குழுவொன்று, கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
அந்த குழுவின் தீர்மானமொன்றை தனக்கு அவர்கள் கையளித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த குழுவின் தீர்மானத்தை, பிரதான குழுவிடம் தாம் கையளித்துள்ளதாகவும், அவர்களின் பதில் கிடைத்ததன்பின்னரே தீர்மானமொன்றை எட்ட முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.
பிரதான குழுவிடமிருந்து தமக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர்களின் பதில் கிடைத்ததன் பின்னரே தமக்கு தீர்மானமொன்றை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசியல் ரீதியில் தீர்மானமொன்றை எட்ட முடியாது எனவும், விசேட குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னரே அந்த தீர்மானத்தை எட்ட முடியும் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post