பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டுக்கு பிரித்தானிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கிய உலகின் முதல் நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.
உடலில் செலுத்தப்பட்ட 95 வீதம் பேருக்கு கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பானது என பிரித்தானியாவின் ஒழுங்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.
அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது ஆரம்;பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மருந்துகளாக வழங்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி மருந்துகளுக்கு பிரித்தானியா ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது.
இது இரண்டு கோடி பேருக்கு கொவிட்-19 தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது.
வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடு வரை வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும்.
ஆனால் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகவும் குறைவான காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் தடுப்பூசிதான்.
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டாலும் கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் உள்ளவர்களை மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட விதிகளைக் கடைபிடிப்பது அவசியம் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.