பதுளை பொது வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
பசறை யூரி தோட்டத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து குறித்த பிரிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்தாம் திகதி ஒருவரும் நேற்று ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவில் 30 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றிய நிலையில் குறித்த பிரிவு உடனடியாக மூடப்பட்டு இருந்தது.
இந்த நோயாளிகளில் கர்ப்பிணிப்பெண் ஒருவரும் பராமரிப்பாளர்களும், மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களின் குழுவும் அடங்குகின்றது.
இதேவேளை, கடந்த 6 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனையின் போது மேலும் இரண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் புற்றுநோயாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது ஆபத்தான நிலை எனவும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலிதா ராஜபக்ஷ தெரிவித்தார்.
Discussion about this post