விண்வெளி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்ட சீனாவின் யுவான் வாங் 5 கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு, அரசாங்கம் விடுத்த கோரிக்கை தொடர்பில் அவசர கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு கொழும்பிலுள்ள சீன தூதரகம், இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 11ம் திகதி முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீனாவிற்கு அறிவித்துள்ளது.
கடந்த 5ம் திகதி வெளிவிவகார அமைச்சு, சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவிற்கு சொந்தமான இந்த கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதானது, தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா, இலங்கையிடம் கூறியிருந்தது.
எனினும், தாம் எரிபொருள் உள்ளிட்ட சேவையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தருவதாக சீனா தெரிவித்திருந்தது.
யுவான் வாங் 5 கப்பலானது, இராணுவ கப்பல் என்ற போதிலும், தாம் நங்கூரமிடும் துறைமுகத்திற்கு சொந்தமான நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவாறே செயற்படுவதாக சீனா அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சீனா கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை அறிவித்துள்ளது. (TrueCeylon)