திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது.
இதன்போது திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.
ஆஞ்சநேயரின் பிறப்பிடமாக அஞ்சனாத்ரி இருந்தது என்பதை புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபிக்கிறது.
இதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை ராம நவமி தினத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராமரின் பிறப்பிடம் அயோத்தி ஆகும். அவரின் பக்தனான அனுமனின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி ஆகும்.
ஆஞ்சநேயரின் பிறப்பிடத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது.
அறிஞர்கள் குழு அனுமனின் பிறப்பிடத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளது. அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள் என பன்வாரிலால் புரோகித் கூறினார்.
ஆந்திர மாநில அரசு ஆலோசனையின்பேரில் அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரியில் ஒரு கோவில் கட்டப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி கூறினார்.
இது தொடர்பில் திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதாரா சர்மா கூறியதாவது,
அனுமனின் பிறப்பு கதை ஸ்ரீமத் ராமாயணத்தின் சுந்தரகாண்டத்திலும், பல புராணங்களிலும், வெங்கடச்சால மகாத் மியத்திலும், பல இலக்கியங்களிலும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
சுந்தரகாண்டத்தில் அனுமனே தனது பிறந்த கதையை சீதாதேவியிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. அனுமான், அஞ்சனாதேவியிடம் தான் வாயுபகவானால் பிறந்தவன், என்று கூறினார்.
மதங்க மகரிஷியின் கூற்றுப்படி, அஞ்சனாதேவி தவம் செய்ய வெங்கடாச்சலத்துக்குச் சென்றார், அஞ்சநேயசாமியைப் பெற்றெடுத்தார், எனவே மலைக்கு ‘அஞ்சனாத்ரி’ என்ற பெயர் ஏற்பட்டது.
இதுகுறித்து, திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கல்வெட்டு 1491-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதியும், 2-வது கல்வெட்டு 1545-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதியும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டும் இதைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post