நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 57 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமானவர் மாரிமுத்து. இவர் இயக்குநர் என்பதை கடந்து பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தொலைகாட்சி தொடருக்கு டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இது அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல் மூலமாக ‘ இந்தாம்ம ஏய்….’ என்ற வசனத்தால் மிகவும் பிரபலமான மாரி முத்து, இவரது நிஜ பெயரையே மறந்து கதாப்பாத்திரத்தின் பெயரான ஆதிகுணசேகரனாகவே ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டார்.
100 படங்களுக்கு மேல் சினிமாவில் நடித்திருந்தாலும் அதில் கிடைக்காத பெயர் எதிர்நீச்சல் எனும் ஒரே சீரியலில் கிடைத்துவிட்டது எனலாம்.
அந்த அளவுக்கு சீரியலில் இவரது நடிப்பு எதார்த்தமாக இருக்கும். இந்த நிலையில் அவரது மறைவு சின்னத்திரை, வெள்ளித்திரையை தாண்டி ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.