பாடசாலைகளில் ஆங்கில கல்வியை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக SMART ஆங்கில வகுப்பறைகளை (English Smart Class) ஸ்தாபித்து, ரைட் டு ரீட் (Right to Read) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சு இதனை செயற்படுத்தப்படுவதாக அறிய முடிகின்றது.
தரம் 3 முதல் தரம் 8 வரையான வகுப்புக்களுக்கு ஆங்கில பாடவிதானங்களை தயாரித்து, அதனை இணைய வழியாக மாணவர்கள் மத்திக்கு கொண்டு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதன்படி, நாடு பூராகவும் உள்ள 837 பாடசாலைகளில் சுமார் 510,745 மாணவர்கள் இந்த திட்டத்தின் ஊடாக தற்போது நன்மை பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
வடக்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
2022ஆம் ஆண்டாகும் போது, இந்த திட்டத்தை நாடு பூராகவும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சு கூறுகின்றது.
தென் மாகாணத்தில் அடுத்தகட்டமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது
தென் மாகாணத்தில் காலி மாவட்டத்திலுள்ள சுமார் 100 பாடசாலைகளுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்பின்னர், இரண்டாம் கட்டத்தில் தென் மாகாணத்தில் மேலும் 100 பாடசாலைகள், இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளன.