டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 6 மணி வரையான காலம் வரை நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
இந்த காலப் பகுதியில் மாத்திரம் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
அத்துடன், குறித்த காலப் பகுதியில் வாகன விபத்துக்களினால் 122 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், 130 வாகன விபத்துக்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதேவேளை, கடந்த ஆண்டுகள் தொடர்பில் ஆராயும் போது, டிசம்பர் மாதம் 20ம் திகதி முதல் ஜனவரி மாதம் 05ம் திகதி வரையான காலத்திலேயே வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
இந்த வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக குறித்த காலப் பகுதியில் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வாகன விபத்துக்களில் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஒட்டுநர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)