ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் 23ம் திகதி சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கொண்டாட்டங்களை முன்னெடுக்குமாறு கட்சியின் ஆதரவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நிலைமை காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, இந்த கொண்டாட்டங்களை முன்னெடுக்குமாறும் கட்சி அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவிற்காகவா நாடு திறக்கப்படுகின்றது?
கடந்த ஒரு மாத காலமாக கொவிட் பரவலினால் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (21) அதிகாலை 4 மணி முதல் எதிர்வரும் 23ம் திகதி நள்ளிரவு வரை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.
இந்த காலப் பகுதியிலேயே பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க, சத்திய பிரமாணம் செய்துக்கொள்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற பிரவேசத்தை வரவேற்கும் வகையிலா அரசாங்கம் இந்த பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துகின்றது என்ற கேள்வி பலர் மத்தியில் எழுகின்றது.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பேரணியொன்றை நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், சிறிகொத்த வீதியை திடீரென செப்பணிட அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க அப்போதைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சிறந்த நட்பொன்று காணப்படுவதை அனைவரும் அறிவார்கள்.
இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் வருகையை கொண்டாடும் வகையிலா நாடு திறக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி இன்று பலரது மனதிலும் எழுந்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post