உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லi என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தலுக்கான நிதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் என தாம் தொடர்ந்து நம்புவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என கடந்த 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் நிதி தேவைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது. அதற்கு நிதி அமைச்சரின் அனுமதி பெறப்பட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் (TrueCeylon)