நாடு முழுவதும் நாளை மறுதினம் (18) வரை மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்திற்கு 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த 3000 மெற்றிக் தொன் டீசலின் ஊடாக, எதிர்வரும் 18ம் திகதி வரை நாடு முழுவதும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் 22ம் திகதி வரை தமக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்குடன், வலுசக்தி அமைச்சுடன் நாளைய தினம் (17) கலந்துரையாடல்களை நடத்த, தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் கூறுகின்றார்.
கொவிட் நிலைமைக்கு மத்தியில், மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு மக்களுக்கு நிவாரண காலம் அறிவிக்கப்பட்டமையினால், தமக்கு 44 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறு மின்சார பயன்பாட்டாளர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையை, தாம் தற்போது அறவிட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 300 மெகா வோர்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் மூன்று கட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும், அதில் ஒரு கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டதாகவும் அமைச்சர் நினைவூட்டினார்.
இவ்வாறு செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை, எதிர்வரும் 22ம் திகதி வழமைக்கு கொண்டு வர முடியும் என பொறியியலாளர்கள் தமக்கு உறுதியளித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, வறட்சி காலங்களில் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக, மின்சாரத்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், எதிர்வரும் 22ம் திகதி வரை வலுசக்தி அமைச்சு, தமக்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில், மின் விநியோக தடை ஏற்படுத்தப்படுவது குறித்து தீர்மானமொன்றை எட்டுவதற்கான நிலைமை தமக்கு ஏற்படும் எனவும் அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிடுகின்றார். (TrueCeylon)