கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தகவல்களை இணையவழி ஊடாக அல்லது வலய மட்டத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கின்றமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதன்படி, அனைத்து மாகாணங்களிலும் உள்ள மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதற்கு மேலதிகமாக சுகாதார அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.