அரசாங்கம் நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாட்கள் நாட்டை முடக்கும் வகையிலான பணிப் பகிஷ்கரிப்புக்களை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பொரள்ளை பகுதியிலுள்ள அரச தாதியர் சங்க கேட்போர் கூடத்தில், நேற்று (17) மாலை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தனர்.
அரச மற்றும் தனியார் துறை சார் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தனர்.
இலங்கையில் கொவிட் திரிபுகள் உருவாகும் வரை பார்த்துக்கொண்டிராது, நாட்டை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாட்டை முடக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் தொழிற்சங்கங்கள் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளதென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சுகாதார துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தமது கடமைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் அதேவேளை, ஏனைய அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு நாட்டை முடக்க நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post