கொழும்பில் தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்று தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சர்வதேச தொடர்பு நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று (13) முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், பனாகொடை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விமானப்படையில் சேவையாற்றியுள்ளதுடன், சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு அவர் விமானப்படை சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post