மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து நேற்று (13) நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொவிட் பரவல் அதிகரித்த நிலையிலேயே, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொவிட் பரவலுக்கு மத்தியில் மாகாணங்களுக்கு இடையில் நேற்று (13) முதல் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது.
கொவிட்−19 தடுப்புக்கான செயலணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இந்த நிலையில், மாகாண எல்லைகளில் பொலிஸாருடன், முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
சுகாதாரம், துறைமுகம், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு, கடமை நிமிர்த்தம் மாகாண எல்லையை கடப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்), வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (13) மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post