கொவிட் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லாது, தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திய காரணத்தினால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் பதிவாகி வருவதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல்களை மேற்கோள்காட்டி, சுவர்ணவாஹினி செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த ஒருவரது மரண வீட்டிற்கு சென்ற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு இதற்கு முன்னர் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தலவாகலை நகர் மற்றும் கொட்டகலை பகுதிகளில் இவ்வாறு கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே.சுதர்ஷன் தெரிவிக்கின்றார்.
இந்த 24 பேரும், இதற்கு முன்னர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மலையகத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்ற பெருந்தோட்ட வீடுகள், அருகாமையில் காணப்படுகின்றமையினால், மலையக பெருந்தோட்டத்திலுள்ள மக்களுக்கு கொவிட் தொற்று அதிகளவில் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post