பெளத்த சமய நிகழ்வொன்றில் குருநாகல் மாநகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண தனது பிறந்தநாள் நிகழ்வை நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
குருநாகல் நகரில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் போது, மாநகர மேயர் கேக் வெட்டி தனது பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடியிருந்தார்.
இதன்போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த சம்பவமானது, நாட்டில் அமலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இடம்பெற்ற ஒன்று என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த செயற்பாடானது, தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் கூறுகின்றார்.
கொவிட் − 19 வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்யும் வகையில், குருநாகல் பொலிஸாரினால் 7 நாட்கள் பிரித் பெளத்த சமய நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சமய நிகழ்விற்கு குருநாகல் மாநகர மேயர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நேற்று பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போதே, மேயரின் பிறந்தநாள் நிகழ்வு இந்த நிகழ்வுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் தலைமையகம் இடமாற்றம் வழங்கியுள்ளது.
Discussion about this post