நாட்டில் கொவிட் தொற்று பரவல் குறித்து தற்போது காணப்படுகின்ற நிலைமை, எதிர்வரும் சில வாரங்களுக்குள் குறையாத பட்சத்தில், நாட்டிற்குள் பாரிய பிரச்சினையான சூழ்நிலை உருவாகும் என சுகாதார பிரிவினர், அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் நாளொன்றில் சுமார் 2000திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் சில வாரங்களுக்கு இந்த நிலைமை தொடருமாக இருந்தால் 20000 முதல் 30000 வரையான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதார பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு 20000 முதல் 30000 வரையான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொவிட் தொற்றின் 3வது அலை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு பெருமளவிலான நோயாளர்கள் பதிவாகின்றமையினால், பலருக்கு ஒக்சிஜன் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் அதிகரிக்குமாக இருந்தால், அவர்களில் 2500 முதல் 3000 வரையான நோயாளர்கள் நடுத்தர நோய் அறிகுறிகளை கொண்டவர்களாக இருப்பார்கள் எனவும் சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, 900 முதல் 1000 வரையான தொற்றாளர்கள் கவலைக்கிடமான நிலைமையை எதிர்கொள்ளக்கூடியவர்கள் எனவும் சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, கவலைக்கிடமான நிலைமைக்கு செல்லும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான தீவிர சிகிச்சை பிரிவுகளை மாகாண மட்டத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு அமைக்கப்படும் தீவிர சிகிச்சை பிரிவொன்றில் குறைந்தது, 100 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், குறித்த தீவிர சிகிச்சை பிரிவை ஸ்தாபக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
25 மாவட்டங்களிலும், 25 வைத்தியசாலைகளை தெரிவு செய்து, அந்த வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளை ஸ்தாபிக்க எதிர்வரும் இரு வாரங்களில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார தரப்பினர், சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கின்றனர். (LankaDeepa)
Discussion about this post