கொவிட் தொற்றாளர்களுக்கு இடையில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோய் தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு, கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றமை தொடர்பில் முதலில் ஆய்வுகளை நடத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள பிரபல வைத்திய நிபுணர்கள் இதனைக் கூறியுள்ளதாக அந்த நாட்டு ஆங்கில செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றைய தினம் வரை கொவிட் தொற்றுக்குள்ளான சுமார் 9000 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹராஷ்ராவில் 90 பேர், குஜராத்தில் 61 பேர் உள்ளடங்களாக 212 பேர் இந்த நோய் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்றும் நீரிழிவு நோய் காணப்படுகின்றவர்களிடையே இந்த நோய் தொற்று அதிகளவில் பரவிவருவதாக குறிப்பிடப்படுகின்றது
தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, பீகார், உத்தரகண்ட், ராஜஸ்தான், மஹராஷ்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நோய் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவல் குறித்து, அந்த நாட்டின் சிரேஷ்ட வைத்தியரான வி.கே.பொல், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோயாளர்களுக்கு முறையற்ற விதத்தில் சிகிச்சை அளிக்கின்றமையினால், இந்த நோய் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதனால், கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கும், கொவிட் சிகிச்சை முறைக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்குள்ளான ஒருவர், அம்பாறை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த தொற்று குறித்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post