மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், மேல் மாகாணத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாடு பூராகவும் உள்ள 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 2.3 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 5.3 மில்லியன் மக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 3.3 மில்லியன் மக்கள் உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, மேல் மாகாணத்திலுள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதன்பின்னர், நாட்டிற்கு தடுப்பூசி கிடைக்கும் விதத்தின் அடிப்படையில், ஏனைய மாவட்டங்களுக்கும் அதனை வழங்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
Discussion about this post