2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம். நிதி அமைச்சர் என்ற விதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும், வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்வதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
எனினும், பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் நடத்தப்படும் தேநீர் விருந்துபசார நிகழ்வு, கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அழைப்பு விடுக்கப்படும் இராஜதந்திர அதிகாரிகளுக்கு மாத்திரம், பாராளுமன்றத்தில் தேநீர் விருந்துபசாரம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத்திட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படும் நாளைய தினம், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலரிகள் மூடப்படவுள்ளன.
பாராளுமன்றம் முழுமையாக கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு, முழுமையாக பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சமூக இடைவெளியை பேணுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சபைக்கு வெளியிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளதுடன், பாராளுமன்ற வரலாற்றில் சபைக்கு வெளியில் ஆசனம் ஒதுக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்திற்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.